Tuesday, August 5, 2014

வேலையின்மையும் போட்டித்தேர்வுகளும்

வேலையின்மையும் போட்டித்தேர்வுகளும் 
      எழுபதுகளிலும் அதற்கு முன்பும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தாலே அது பெருமைக்குரிய விஷயம்.  எண்பதுகளில் ஒரு இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் அதுவும் பெருமைக்குரிய ஒன்றாக கருதப்பட்டது. தொண்ணூறுகளில் பொறியியல் பட்ட மோகம் வந்து பணம் காய்க்கும்  IT துறைகளில் ஒரு தா(க்)கத்தை ஏற்படுத்தியதும் உண்மை. அடுத்த பத்தாண்டுகளில் பல்கிப் பெருகிய பொறியியல் கல்லூரிகளால் அதிகரித்த பட்டதாரிகளின் எண்ணிக்கையினால் பொறியியல் படிப்புக்கும் வேலையின்மை ஏற்பட்டு 2014ல் அவர்களின் நிலை குறித்து ஒரு திரைப்படம் எடுத்து அதை அவர்களுக்கே DEDICATE செய்ய வேண்டிய பரிதாப நிலை.

    ஆனால் எழுபதுகள் ஆனாலும் சரி,  2014 ஆனாலும் சரி (இடையில் ஓர் அய்ந்தாண்டு காலம் தவிர) என்றுமே எண்ணற்ற தமிழக இளைஞர்களின் கலங்கரை விளக்கமாக நின்று களம் அமைத்து தருவது TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான்.

    அந்த தேர்வுகள் ஒருவரின் எதிர்காலத்தை மட்டும் நிர்ணயிப்பதில்லை. நிலையான ஒரு பொருளாதார ஆதரவையும் நமக்களிக்கிறது. 
அது மட்டுமா?
       பட்டப் படிப்பு வரை ஒரு சராசரி மாணவனாகவே இருக்கும் பலரை சாதனை மனிதனாக்குவதும் இந்த தேர்வுகளே. தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை எந்த ஆசிரியரும் எனக்குக் கற்றுத் தராத போர்க்குணத்தை இரண்டு மூன்று போட்டித்தேர்வுகள்தான் எனக்கு கற்றுக்கொடுத்தன.

           விளையாட்டுப் பருவத்தில் நாம் கற்ற கல்வி அடிப்படைக் கல்வி என்றால் வேலை தேடும் பருவத்தில் நாம் கற்கும் கல்விதான் நமக்கு வாழ்வியலைக் கற்றுத்தருகிறது. பல களங்களை அறிமுகப்படுத்துகிறது. பல தோல்விகளை நம் தோள்களில் சுமத்துகிறது. அன்றாட போராட்டங்களை பழகிக்கொள்ளும் வகையில் நம்மை செம்மைப்படுத்துகிறது. இறுதியில் வெற்றி மேல் வெற்றி பெற்ற போதும் போதை தராமல் பொறுமை கொள்ள செய்கிறது.

     எனவே எத்தனை லட்சம் பேர் களத்தில் நின்றாலும்  உங்கள் பாதை தெளிவானதாகவும் , சரியானதாகவும் இருக்கும் போது பயணம் சுமையாக இராது. இலக்கு ஒரு நாள் எட்டப்படும் . வானமும் ஒரு நாள் வசப்படும். வசந்தம் உங்கள் வாசல் வரும். 
தொடரட்டும் உங்கள் பயணம் . தோல்விகளைத் தோற்கடிக்கும் வரை...

No comments:

Post a Comment

Followers