Tuesday, January 24, 2012

GROUP-I பொது அறிவு - புயலுக்கு பெயர் வைத்தல்

புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?


 தமிழகத்தையும் புதுவையையும் உலுக்கி எடுத்தது, ‘தானே’. இப்போது, ‘தானே’ போலவே சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜல்’, ‘லைலா’ போன்ற பெயர்களும் ஊடகங்களில் அடிபட்டன. புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?


பிரத்யேகமான பெயர் இருந்தால்தான் எந்த விஷயத்தையும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். புயல் குறித்த எச்சரிக்கைக்கும் அதன் பின் விளைவுகளை தெரிவிக்கவும் ஊடகங்களுக்கு இந்தப் பெயர் பெரிய அளவில் உதவியாக உள்ளது.


ஆரம்பத்தில் தன்னிச்சையாகவும் பின்பு பெண்களின் பெயரிலும் புயல்கள் குறிப்பிடப்பட்டன. அதன்பின் சர்வதேச அளவில் செயல்படும் வானிலை ஆய்வு மையம் பல நாடுகளும் சிபாரிசு செய்த பெயர்களை முறைப்படுத்தி, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப புயலுக்கு பெயர் வைக்கப்பட்டது.


உலக வானிலை அமைப்பில் (world metrological organization) இந்தியா, வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை ஆகிய 8 நாடுகளைக் கொண்ட குழு உள்ளது. வங்க, அரபிக் கடலில் ஏற்படும் புயலுக்கு இந்த நாடுகள் சிபாரிசு செய்த பெயர்களில் இருந்து பெயரிடும் முறை, 2004ம் ஆண்டு அக்டோபர் முதல் நடைமுறையில் உள்ளது.


இவை ஏற்கனவே கலாசாரத்தைப் பிரதிபலிக்கும், நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக உள்ள 64 பெயர்களைத் தேர்வு செய்துள்ளன. இதில் இதுவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான 28 புயல்களுக்கு 28 பெயர்கள் வைக்கப்பட்டு விட்டன. மற்ற பெயர்கள் இனி வரும் புயல்களுக்கு வைக்கப்படும். இதற்கு முன் வந்த புயல்களுக்கு ஒன்னி, நிஷா (வங்க தேசம்), ஆகாஷ், பிஜ்லி (இந்தியா), கோனு, அயலா  (மாலத்தீவு), ஏமின், பயர் (மியான்மர் ), சிடர், வார்த் (ஓமன்), நர்கீஸ், லைலா (பாகிஸ்தான்), ராஷ்மி, பந்து (இலங்கை), கைமுக் (தாய்லாந்து) ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டன.


‘தானே’, மியான்மர் நாடு தேர்வு செய்த பெயர்களில் ஒன்று. அடுத்த புயலுக்கு ஓமன் நாடு தேர்வு செய்த முர்ஜான் (murjaan) என்ற பெயர் இருக்கும்.

No comments:

Post a Comment

Followers